திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரம் பேர் எச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக எய்ட்ஸ் தினம் இன்று (1ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் தாக்கத்தை குறைக்க உறுதிமொழி எடுத்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர் உள்ளனர். எய்ட்ஸ் என்ற நிலையை அடைவதற்கு முன்பாகவே தகுதி உள்ள நபர்களுக்கு ஏ.ஆர்.டி சிகிச்சை அளிக்கப்படுகிறது. பாளை மருத்துவ கல்லூரியில் 1,700க்கும் மேற்பட்டவர்களுக்கு இச்சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட 69 குழந்தைகளுக்கு கல்வி மற்றும் ஊட்டச் சத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 1.91 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அறக்கட்டளை மூலம் வழங்கப்படுகிறது.இந்த அறக்கட்டளை மூலம் கல்வி உதவி தொகையாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தலா 3 ஆயிரம் ரூபாய், 10ம் வகுப்பு முதல் கல்லூரி வரை படிக்கும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.எச்.ஐ.வி நோய் பாலியல் தொழில் செய்பவர்களிடையேயும், நீண்ட நாட்களுக்கு இடம் பெயர்பவர்களிடையேயும், 25 முதல் 40 வயது வைர உள்ளவர்களிடையேயும் அதிகமாக காணப்படுகிறது. வரும் 2012ம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி கிருமி தொற்று நோயை தடுக்கும் குறிக்கோளை அடைய இந்நோய் குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம் தேவை.
இன்று கருத்தரங்கம்: பாளை அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் இன்று (1ம் தேதி) காலை 10 மணிக்கு உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கம் நடக்கிறது. மாவட்ட கலெக்டர் ஜெயராமன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகிறார். முதன்மை கல்வி அலுவலர் மேரி ஜெசி ரோச், சுகாதார பணிகள் இணை இயக்குனர் நெடுஞ்செழியன், மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பழனியப்பன், சங்கரன்கோவில் துணை இயக்குனர் கலு சிவலிங்கம், நெல்லை துணை இயக்குனர் மீராமைதீன், தென்காசி காச நோய் துணை இயக்குனர் ராம்நாத், நெல்லை தொழு நோய் துணை இயக்குனர் சுப்பிரமணியம் உட்பட பலர் பேசுகின்றனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் நாராயண சீனிவாசன் நன்றி கூறுகிறார்.
No comments:
Post a Comment