பிரமோஸ் ஏவுகணை வெற்றிகர சோதனை
பாலாசூர் : ஒலியின் வேகத்தை விட அதிவேகமாக செல்லக்கூடிய பிரமோஸ் ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. கடந்த 2001ல் முதன்முதலாக ரஷ்யாவின் உதவியுடன் பிரமோஸ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது. ஒலியின் வேகத்தை விட, 2.8 மடங்கு அதிவேகமாக செல்லக்கூடிய இந்த ஏவுகணை, தற்போது கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பத்தில் மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஒடிசாவின் சண்டிப்பூர் ஏவுதளத்தில் நேற்று நடத்தப்பட்டது. ஒன்பது மீட்டர் நீளமுள்ள பிரமோஸ் ஏவுகணை 300 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து கொண்டு 290 கி.மீ., வரை பாய்ந்து சென்று தாக்கவல்லது. சண்டிப்பூர் ஏவுதளத்தில் இந்த ஏவுகணை சோதனை நேற்று நடந்ததால் சுற்றியுள்ள ஆறு கிராமங்களை சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். 401 குடும்பங்களை சேர்ந்த 3,280 பேரும், அவர்களின் கால்நடைகளும் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதற்காக அவர்களுக்கு ஒரு நாளைக்கு தலா 165 ரூபாயும், குழந்தைகளுக்கு தலா 95 ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட்டது. கால்நடைகளுக்காக தலா 50 ரூபாய் வழங்கப்பட்டது. பிரமோஸ் ஏவுகணையை நிலம், நீர், ஆகாயம் ஆகிய மார்க்கங்களிலிருந்து ஏவி எதிரியின் இலக்கை தாக்கவல்லது.
No comments:
Post a Comment