WELCOME TO JUST-ONECLICK.BLOGSPOT.COM ......... A few stories around Education on the UNICEF India

Wednesday, December 1, 2010

ரயில் இன்ஜினுக்குள் ஏறி கேபிள்களை கழற்ற முயற்சி : விபத்து ஏற்படுத்த மர்ம நபர்கள் செய்த சதியா?

 
 
தூத்துக்குடி : திருச்செந்தூரில் நின்ற பயணிகள் ரயில் இன்ஜினுக்குள் ஏறிய மர்ம நபர்கள், அங்கிருந்த கேபிள்களை கழற்ற முயன்றுள்ளனர். விபத்து ஏற்படுத்த மர்ம நபர்கள் இவ்வாறு சதி செய்தனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்செந்தூரிலிருந்து நெல்லைக்கு பயணிகள் ரயில் (எண்: 732) நேற்று காலை 7.20 மணிக்கு புறப்பட இருந்தது. அதன் டிரைவர் மந்திரம், உதவி டிரைவர் வெள்ளையன், காலை 6.30 மணியளவில் ரயில் இன்ஜினை "ஆன்' செய்ய அதன் கேபினுக்குள் ஏறினர். அங்கு, ஜெனரேட்டர் பகுதிக்கு செல்லும் கேபிள்கள் மற்றும் ஒயர்கள் கழற்ற முயற்சி நடந்திருந்தது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள், நிலைய மேலாளர் கணேசன், உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர். பிரச்னையை தவிர்க்க அந்த ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதில், பயணிக்க டிக்கெட் எடுத்திருந்தவர்களுக்கு பணம் திருப்பி தரப்பட்டது. இதனால், தினமும் சீசன் பாஸ் மூலம் இந்த ரயிலில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களில் பணிபுரிவோர் சிரமம் அடைந்தனர்.

சதி செயல் காரணமா? முதல் நாள் இரவு நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு வரும் இந்த ரயில், அங்கு ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டு, மீண்டும் அடுத்த நாள் காலை தான் நெல்லைக்கு தனது பயணத்தை துவங்கும். ரயில் பிளாட்பாரத்தில் நிற்கும் போது, போலீஸ் ரோந்தும் இருக்கும். ஆனாலும், அதன் இன்ஜினுக்குள் மர்ம நபர்கள் புகுந்து, தடிமனான கேபிள்களை கழற்ற முயன்றது எப்படி, ரயிலில் ஏதாவது ஒருவகையில் விபத்து ஏற்படுத்த விஷமிகள் இவ்வாறு செய்தனரா, குடிபோதையில் மர்ம நபர்கள் இதை செய்தனரா அல்லது கேபிள்களை திருட முயற்சி நடந்ததா என, விசாரணை நடந்து வருகிறது.

அந்த இன்ஜினுக்குள் உள்ள கேபிள்கள் மற்றும் ஒயர் இணைப்புகள் குறித்து முன்கூட்டியே நன்கு தெரிந்தவர்களாலேயே இவ்வாறு செய்திருக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2008ம் ஆண்டும் இங்கு ரயில் இன்ஜினில் மர்ம நபர்கள் இதேபோல கேபிள் மற்றும் வயர்களை அறுத்தனர். அச்சம்பவத்தில் ஈடுபட்டது யார் என, இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...