மடத்துக்குளம் : பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், அரசு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் கல்வித்தரம் குறைவதோடு, சுகாதாரக்கேடால் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் 60 க்கும் மேற்பட்ட அரசுபள்ளிகளில் 10 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப் பகுதியிலுள்ள சில பள்ளிகள் தவிர 90 சதவீத பள்ளிகளில் குடிநீர், கழிப்பிடம், சுற்றுப்புற சுகாதாரம் கடைபிடித்தல், உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. பல்வேறு திட்டங்கள், நிதி உதவிகள், மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் புதிய வகுப்பறைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட கட்டுமானப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்படுகிறது. ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளிலும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை இருந்து வருகிறது.
குப்பம்பாளையம்: கடந்த ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்தப்பட்டும் இது வரை அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் தவித்து வருகின்றனர். கொழுமம் மற்றும் குப்பம்பாளையம் பகுதியில் உள்ள சாக்கடைகள் அனைத்தும் இணையும் இடமாக பள்ளி வளாகம் உள்ளது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் புதிய வகுப்பறைகள் மட்டும் கட்டப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. கழிப்பிட வசதி இல்லாத நிலையில் மேல்நிலை வகுப்பு மாணவிகள் சிரமப்படும் "அவலநிலை' உள்ளது.
இது குறித்து பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்தும், நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. பள்ளி வளாகம் முழுவதும் சாக்கடை நீர் குளம் போல் தேங்கி பன்றிகள் மேய்ந்து வருகின்றன. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு மாணவர்கள் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உருவாயியுள்ளது.
மடத்துக்குளம்: இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல வகுப்பறைகள் கதவுகள் இல்லாமல் நடந்து வருகின்றன. கதவுகள் இல்லாத வகுப்பறைகளுக்குள் கால்நடைகள், விஷபூச்சிகள் சென்று தங்குவதால் மாணவர்கள் பல வித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். பள்ளிவளாகத்தில் பல இடங்களிலுள்ள குடிநீர் குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் குடிநீருக்கு அலைய வேண்டியதுள்ளது.
கிராம பள்ளிகள்: மடத்துக்குளம் பகுதியிலுள்ள கண்ணாடிப்புத்தூர் நடுநிலைப்பள்ளியில் மேற்கூரை தரமில்லாத காரணத்தால் வகுப்பறைகளில் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. நீலம்பூர் தொடக்கப்பள்ளியில் சத்துணவுக்கூடம் பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையிலுள்ளது. சின்னப்பன் புதூர் தொடக்கப்பள்ளிக்கு போக்குவரத்து வசதி இல்லை. கழுகரை அரசு நடுநிலைபள்ளியில் சுற்றுச்சுவர், கழிப்பிட வசதி கிடையாது. சாக்கடைகள் பள்ளி வளாகத்துக்குள் செல்லும் நிலையும் உள்ளது. பல கிராமப்பள்ளிகளில் இருக்கைகள் இன்றி மாணவர்கள் தரையில் அமர்ந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், கல்வித்தரம் உயர்ந்து வருகிறது. ஆனால் பல்வேறு அரசு திட்டங்களின் வாயிலாக பல கோடிநிதி ஒதுக்கீடு செய்தும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளும், கல்வித்தரமும் குறைந்து வருவது குறித்து பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கல்வி நிர்வாகத்தினர் நேரடியாக அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும். புதிய நிதிகளை வைத்து அரசுபள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு.
"திட்ட மதிப்பீடு தயாரிப்பு' : மடத்துக்குளம் பி.டி.ஓ.,மாதி கூறியதாவது: அனைத்து பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மராமத்து, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஒன்றிய பொறியாளர்களால் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது, என்றார்.
No comments:
Post a Comment