பெர்லின்:"ஜெர்மனியில் ஆட்சியில் இருந்து வரும் கூட்டணி அரசு குறித்த ரகசியங்களை, அமெரிக்கத் தூதரகத்திடம் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்தார்' என்று, "விக்கி லீக்ஸ்' வெளியிட்ட செய்தியை அடுத்து, அந்த உதவியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ஜெர்மனியில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும், விடுதலை ஜனநாயகக் கட்சியும் கூட்டணி வைத்து ஆட்சியில் உள்ளன. கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சித் தலைவரான ஆஞ்சலா மெர்க்கெல் தான் தற்போதைய ஜெர்மனி அதிபர்.
அமெரிக்க அணு ஆயுதங்களை ஜெர்மனியில் வைத்து செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆஞ்சலாவுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதுகுறித்த தகவல்களை, ஜெர்மனி வெளியுறவு அமைச்சரான கிடோ வெஸ்டர் வெல்லே என்பவரின் உதவியாளரான ஹெல்மட் மெட்ஸ்னர் என்பவர், ஜெர்மனிக்கான அமெரிக்கத் தூதர் பிலிப் மர்பியிடம் தெரிவித்துள்ளார்.இவ்விவரங்களை பிலிப் மர்பி, 2009, அக்டோபரில் அமெரிக்கத் தலைமையகத்திற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகவல், சமீபத்தில் வெளியான, "விக்கி லீக்ஸ்' ரகசிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்தது.இதையடுத்து, அமைச்சர் வெஸ்டர் வெல்லேயின் செய்தித் தொடர்பாளர் நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், ஹெல்மட் மெட்ஸ்னர், ரகசியங்களை உளவறிந்து சொன்னதால் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
No comments:
Post a Comment