Friday, December 3, 2010
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஹெச்.ஐ.வி.,
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 40 கர்ப்பிணி பெண்களுக்கு ஹெச்.ஐ.வி., தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது; 25 குழந்தைகள் ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. உலக எய்ட்ஸ் தினம் ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடந்தது. ஈரோடு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ரகுநாதன் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டில் 67 ஆயிரத்து 204 பேருக்கு ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 958 பேர் ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இவர்களில் 40 கர்ப்பிணி பெண்கள், 25 குழந்தைகள் அடக்கம். கூட்டு மருந்து சிகிச்சை மையத்தில் 2,511 பேர் பதிவு செய்துள்ளனர். 1,467 பேர் கூட்டு மருந்து சிகிச்சை எடுத்து வருகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு கலெக்டர் சவுண்டையா பேசியதாவது: மனித சமுதாயம் ஏதாவது ஒரு நோயால் பயப்பட்டுக் கொண்டே போகிறது. பட்டினி சாவு, காலரா நோய் தாக்குதல், அம்மை நோய் போன்றவையால் லட்சக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அவை கட்டுப்படுத்தப்பட்டன. தற்போது எய்ட்ஸ் நோயை கண்டு பயப்படுகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எய்ட்ஸ் விழிப்புணர்வு கிராம மக்களிடையே ஏற்படவில்லை. ஈரோடு, சேலம், கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு மற்ற மாநிலங்களை சேர்ந்த டிரைவர்கள் வருகின்றனர். அவர்களின் மூலமும் எய்ட்ஸ் பரவுவதாக கூறப்படுகிறது. எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட மக்களை ஒதுக்குவதோ, புறக்கணிப்பதோ இல்லாமல், அவர்கள் மீது அன்பு செலுத்தி வாழ வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஈரோடு மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் நாகராஜன் பேசுகையில், ""எய்ட்ஸ் விழிப்புணர்வு பணிக்காக ஈரோடு அரசு மருத்துவமனை மாநில அரசின் பரிசு பெற்றுள்ளது,'' என்றார். எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பேசிய நம்பியூர் சாவக்கட்டுபாளையம் பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி மாணவியர் சவுபர்னிகா, கலைமணி ஆகியோருக்கு கலெக்டர் சவுண்டையா பரிசு வழங்கினார். காசநோய் துணை இயக்குனர் ராஜசேகரன், தன்வந்திரி செவிலியர் கல்லூரி நிர்வாக இயக்குனர் டாக்டர் கணபதி, டாக்டர் நாகராஜன், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்க திட்ட மேலாளர் சிவமுருகன், செஞ்சிலுவை சங்க மாவட்ட மேலாளர் சரவணக்குமார், வேளாளர் கல்லூரி தாளாளர் சந்திரசேகர், எம்.ஆர்.கலர் லேப் நாராயணன் ஆகியோர் பேசினர்.
Labels:
இத படிங்க முதல்ல
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment