கோவை : கோவை புறநகரில் இயக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாருக்கு "பணத்தேவை' அதிகரித்துள்ளது போலும். விபத்து மற்றும் குற்றங்களை தடுப்பதில் முனைப்பு காட்டாமல், வாகன சோதனை நடத்தி டிரைவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் பறிப்பதிலேயே குறியாக உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் வழிப்பறி, கொள்ளை குற்றங்களை தடுக்கவும்; வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுவோருக்கு அவசர கால உதவிகளை மேற்கொள்ளவும், "தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் வாகனம்' கோவையில் இயக்கப்படுகிறது. இவ்வாகனங்கள், கோவை - சத்தியமங்கலம் சாலை, அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை மற்றும் எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் "ஷிப்ட்' முறையில் 24 மணி நேரமும் இயக்கப்படுகின்றன.ஒவ்வொரு ரோந்து வாகனத்திலும் தலா ஒரு எஸ்.ஐ., தலைமையில் நான்கு போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் திருட்டு, வழிப்பறி குற்றங்கள் அல்லது வாகன விபத்து நடந்திருப்பதாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது இப்போலீசாரின் பணி. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சாலைகளின் எல்லைக்குள் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டிய போலீசார், முறைகேடாக பண வசூலில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன சோதனை என்ற பெயரில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் போலீசார், டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் ஆவணங்கள் வைத்திருக்காத நபர்களிடம் பணம் வசூலிக்கின்றனர். குறிப்பாக ஆடு, மாடு, கோழி ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களை மடக்கி 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை கறந்துவிடுகின்றனர் நீலம்பூர் பைபாஸ் ரோட்டில் இவ்வகையான வசூல் அதிகரித்துள்ளது.சரக்கு லாரியில் ஆடு, மாடு >உள்ளிட்ட கால்நடைகள் தினமும் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச்செல்வதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விதிமுறைகளை டிரைவர்கள் பின்பற்றுவதில்லை. அதிக எண்ணிக்கையில் கால்நடைகளை லாரிகளில் அடைத்து பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் கொண்டு செல்கின்றனர். இவ்வாகனங்களை மடக்கி பிடிக்கும் ரோந்து போலீசார், டிரைவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.மாமூல் தர மறுக்கும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்வோம் என வெளிப்படையாகவே மிரட்டவும் செய்கின்றனர்.
இதனால், பலரும் போலீசார் கேட்கும் பணத்தை கொடுத்துச் செல்கின்றனர். இதுபோன்ற முறைகேடுகள் தமிழகம் - கேரளா எல்லை அருகிலுள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதிகளில் அதிகம் நிகழ்கின்றன. மேட்டுப்பாளையம், அன்னூர், துடியலூர், செட்டிபாளையம், தொண்டாமுத்தூர், பேரூர் பகுதிகளிலும் வாகன சோதனை என்ற பெயரில் போலீசாரின் அடாவடி வசூல் நடக்கிறது.
தமிழக மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி கூறுகையில், "வாகன சோதனை என்ற பெயரில் பண முறைகேடுகளில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'' என்றார்.
No comments:
Post a Comment