
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக 21 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஒரு காலத்தில், "தகர டப்பா' பஸ்களாக இயங்கி வந்த மாநகர பஸ்கள், காலத்திற்கேற்ப ஓரளவு மாற்றம் பெற்று, இயங்கி வருகின்றன.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சற்று முன்னோடியாகச் சென்று, குளுகுளு வசதியுடன் கூடிய 100 "ஏசி' பஸ்களை இயக்கி வருகிறது. இவை பிராட்வே - தாம்பரம், பிராட்வே - கோயம்பேடு, செங்குன்றம் - வண்டலூர், பெரம்பூர் - பெசன்ட் நகர், திருவொற்றியூர் - தாம்பரம், பிராட்வே - கோவளம், ஸ்ரீபெரும்புதூர் - சென்னை என பல இடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த பஸ்களுக்கு சென்னை மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், கட்டணம் அதிகம் என்பதால், அதில் ஏற பெரும்பாலானவர்கள் தயக்கம் காட்டி வந்தனர். தற்போது நீண்ட தூர பயணங்களுக்கு ஆட்டோ, கார்களில் செல்வதை விட, "ஏசி' பஸ்கள் தான் நல்லது என கருதி பயணிக்க தொடங்கியுள்ளனர்.குறைந்தபட்சமாக "ஏசி' பஸ்களில் நாளொன்றுக்கு 18 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அளவு வசூலானால் மட்டுமே, பஸ்களை முறையாக பராமரிக்க முடியும்; நஷ்டமின்றி இயக்க முடியும். ஆனால், தற்போது சராசரியாக நாளொன்றுக்கு 11 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூலாகிறது.ஒரு "ஏசி' பஸ் இயக்குவதால், நாளொன்றுக்கு 7,000 ரூபாய் என்ற விகிதத்தில், சென்னையில் இயக்கப்படும் 100 பஸ்களுக்கு மட்டும் ஏழு லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. சென்னை நகரில் "ஏசி' பஸ்களை இயக்குவதால், ஒரு மாதத்திற்கு இரண்டு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. விழுப்புரம் கோட்டத்தில் இயக்கப்படும் 30 பஸ்களும் இதே நிலையில் தான் இயங்கி வருகின்றன.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகரில் 100 "குளுகுளு' பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோட்டத்திலிருந்து 30 பஸ்களை வாங்கி, விழுப்புரம் கோட்டம் தொலைதூர பஸ்களாக இயக்கி வருகிறது. "ஏசி' பஸ்சுக்கான தயாரிப்புக்கு முற்றிலும் வெளிநாட்டுப் பொருட்களைத் தான் நம்ப வேண்டியுள்ளது. ஒரு பஸ்சுக்கு ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டியுள்ளது.பராமரிப்புக்கு தேவைக்கான உதிரி பாகங்களுக்கும் வெளிநாட்டு இறக்குமதி பொருட்களை நம்பியிருப்பதால், பராமரிப்புச் செலவும் அதிகமாகிறது. இதன் காரணமாக பஸ்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.அசோக்லேலண்ட் நிறுவனமும், டாடா நிறுவனத்தின், "டெல்கோ' நிறுவனமும், "ஏசி' பஸ்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளன. சில மாதங்களில் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களே கிடைக்கும் என்பதால், பராமரிப்புச் செலவு வெகுவாக குறையும்; நஷ்டமின்றி பஸ்களை இயக்க முடியும். அதே நேரத்தில் "ஏசி' பஸ்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தினால், நஷ்டத்தை குறைக்க வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு போக்குவரத்து கழக அதிகாரிகள்கூறினர்.
No comments:
Post a Comment