
ஊட்டி அருகேயுள்ள மஞ்சனக்கொரை ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா கூறியதாவது: நான் பொதுவாழ்வுக்கு வந்து, 20 ஆண்டுகள் ஆகின்றன. நான் அமைச்சர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீலகிரி மக்கள் காட்டிய அன்பும் ஆதரவும் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதவி போய்விட்டால் முடங்கி போய்விட மாட்டேன். லோக்சபா தேர்தலில் என்னை அதிகப்படியான ஓட்டுகள் வித்தியாசத்தில் நீலகிரி மக்கள் வெற்றி பெற செய்தனர். அதன் மூலம் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சர் பதவி கிடைத்தது. அந்தத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினேன். ஏழை தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பாமர மக்களுக்கும் தொலைதொடர்பு வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற சபதத்தை நிறைவேற்றியே பதவியை துறந்தேன்.
என் முயற்சியில் நிமிடத்துக்கு 1.60 என்றிருந்த கட்டணம், 10 பைசாவாக குறைக்கப்பட்டது. 30 கோடியாக இருந்த தொலைபேசி இணைப்புகள் தற்போது 73 கோடியை எட்டியுள்ளது. என் மீது விமர்சனங்கள் வரலாம். நீதிமன்றத்தில் இந்த விவகாரம் இருப்பதால் நான் அதிகம் பேச மாட்டேன். தமிழகத்தில் இன்னும் ஆறு மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன்பு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. ஒரு அரசியல் கட்சி தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதி அளிக்கும், அதில் சிலவற்றையே நிறைவேற்ற முடியும். ஆனால், தி.மு.க., அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. இவ்வாறு ராஜா கூறினார்.
No comments:
Post a Comment